சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய, 36 பேர் கொண்ட குழுவை தி.மு.க., தலைமை அமைத்துள்ளது. இக்குழு, தொகுதிவாரியாக சென்று, மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது. அவர்களிடம், திமுகவினர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, அக்கட்சி வட்டாரம் கூறியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தினமும் மாலையில் என்ன பணி இருந்தாலும், திமுக தலைமையகமான அறிவாலயம் வருவார். அங்கு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரையும் உடன் வைத்து கொள்ள மாட்டார். மாறாக, அவர்களுக்கு எதிராக மாவட்டங்களில், எதிர் அரசியல் செய்யும் திமுக நிர்வாகிகளை வரவழைத்து, மாவட்டம், ஒன்றியம், கிளை அளவில் கட்சி விவகாரங்களை கேட்டறிவார். ஆனால், ஸ்டாலின் முதல்வரான பின் அறிவாலயத்திற்கு தினமும் வரவில்லை. அப்படியே வந்தாலும், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் என, முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உடன் இருந்தனர். அவர்கள், தங்கள் ஆதரவாளர்களை மட்டுமே, ஸ்டாலினை சந்திக்க வைத்தனர். மாவட்டம் முதல் கிளை வரை என்ன நடக்கிறது என்ற விபரங்களை, ஸ்டாலின் கேட்டறியவில்லை.