தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சிபிஎஸ்இ 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் 3 மொழிகள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்தபோது அந்த முடிவை நானும் வரவேற்றேன். சிபிஎஸ்இ 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 2029-30 கல்வியாண்டிலிருந்து மூன்றாவது மொழியை கட்டாயமாக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மே 15ம் தேதி பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுப்பிய சுற்றறிக்கையில், 9ம் வகுப்புக்கு இந்தாண்டு முதலே மும்மொழி கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு தமிழக மாணவர்கள், பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகள் ஏற்கனவே 6ம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ளனர். தற்போதைய புதிய அறிவிப்பின் படி, 9ம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும். மிக குறுகிய காலத்திற்குள் 9ம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியை கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.