பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை

பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை
Advertisement
எழுத்து அளவு

நடிகர் தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணக்கமான முடிவை எட்டி தற்போது அவரது படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த விவாகரத்தில் தற்போது பெப்சி தலையிட்டு தனுஷ் விவாகரம் பற்றி விசாரிக்க தனி குழுவை நியமித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த செயல் பெப்சியின் அதிகார வரம்பை மீறியது என்றும், தன்னை சக்தி வாய்ந்த அமைப்பாக காட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழ்த் திரைப்பட உலகில் ஒட்டுமொத்த மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில், பெப்சி உட்பட, அனைத்து தமிழ்த் திரையுலக தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்கம், ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, உடனடியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.

நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு, தனுஷ் படப்பிடிப்பும் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனுஷ் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில், திடீரென, தனுஷ் தொடர்பாக விசாரிக்க ஒரு கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர்கள்-நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி பெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. பெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.

ஏனெனில், நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிபட நினைவுபடுத்துகிறோம். மேலும், பெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

அதற்கு உதாரணமாக, தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் எல்லா சூழல்களிலும், அனைவருக்கும் முன்பாக, தென்னிந்திய நடிகர் சங்கமே பெப்சி தொழிலாளர்களுக்குமான நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதையும், கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும். அதை பெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

ஆகவே, உழைக்கும் தொழிலாளிகளை பின்புலமாக நிறுத்தி, பெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதை தவிர்த்து, அந்த கவனத்தை தங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை, திரைத் தொழிலாளர்கள் மீது உள்ள உண்மையான அக்கறையால் அறிவுறுத்துகிறோம்.

அத்துடன், திரைத்துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் பெப்சி நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும், வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map