பிளாஷ்பேக்: நாகேஷை அறிமுகப்படுத்திய முக்தா சீனிவாசன்
பொதுவாக நாகேஷை அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் என்றும், முதல் படம் "நீர்குமிழி" என்றே பலராலும் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. நாகேஷை அறிமுகப்படுத்தியது முக்தா சீனிவாசன், படம் "தாமரைக்குளம்".
கே.பாலச்சந்தர், வாலி, நாகேஷ் ஆகிய மூவரும் ஒரே காலத்தில் நாடகங்களில் பணியாற்றிக் கொண்டே சினிமா வாய்ப்பு தேடியவர்கள். அந்த நேரத்தில் மயிலாப்பூரில் நடைபெற்ற நாடகமொன்றை முக்தா சீனிவாசன் பார்த்திருந்தார். அந்நாடகத்தில் நடித்த நாகேஷின் நகைச்சுவை நடிப்பு சீனிவாசனுக்குப் பிடித்திருந்தது. இதனால் அப்போது தான் இயக்கி வந்த "தாமரைக்குளம்" படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நாகேஷை அறிமுகம் செய்தார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நாகேஷுக்கு ரூ.2500 ஊதியம் கொடுக்கப்பட்டது. இதுவே நாகேஷுக்கு திரைப்பட அறிமுகமாகவும் அமைந்தது. ஆனால் முதல் படத்தில் நாகேஷின் நடிப்பு கிண்டல் செய்யப்பட்டது. சர்க்கஸ் கோமாளி மாதிரி நடிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
கல்யாணி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான தாமரைக்குளம் படத்தை கதாசிரியர் எஸ். ஆர். நடராஜனும், ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். வீரபாகுவும் கூட்டாகத் தயாரித்தனர். இத்திரைப்படத்தில் சௌகார் ஜானகி, வி. கோபாலகிருஷ்ணன், எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.